உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது. இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையைப் பெற்றுத் தருகிறது. இந்த சிம் கார்டின் விலை 10 யூரோ. மாதக் கட்டணம் அல்லது குறிப்பிட்ட காலக்கெடு என இந்த சிம் கார்டிற்குக் கட்டுப்பாடு இல்லை.
இந்த வாட் சிம் கார்டை வடிவமைத்து, சேவைக் கட்டமைப்பினை வழங்குவது 'ஸீரோ மொபைல்' என்னும் இத்தாலிய தொலை தொடர்பு நிறுவனமாகும். மெசேஜ் அனுப்ப, இது வாட்ஸ் அப் போலவே இயங்குகிறது. ஆனால், படங்கள் அனுப்ப, பாடல்களை இணைத்து அனுப்ப, குரல் ஒலியைப் பதிவு செய்து அனுப்ப, கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மொபைல் சாதனங்கள் வழி மெசேஜ் அனுப்ப வாட்ஸ் அப் மிகச் சிறந்த அப்ளிகேஷனாக உள்ளது. இதனுடைய ஒரே கட்டுப்பாடு, டேட்டா தொடர்பு தான். குறிப்பாக நீங்கள் பயணத்தில் இருக்கையில், ரோமிங் கட்டணம் அதிகமாக இருக்கும். அதனால், வாட்ஸ் அப் வழி செய்தி அனுப்புவது செலவு அதிகம் கொள்ளும் இனமாக அமைந்துவிடும். மேலும், அனைத்து இடங்களிலும் வை பி வசதி கிடைக்கும் என நாம் உறுதி செய்திட முடியாது. மேலும், வை பி இலவசமாகவும் கிடைக்காது.
இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழி குறித்து சிந்திக்கையில், இந்த அப்ளிகேஷன் மற்றும் சிம் கார்ட் யோசனை வந்ததாக, ஸீரோ மொபைல்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment